இனி லைனில் நிற்க வேண்டியது இல்ல, சில்லரை இல்ல என்று கவலைப்பட வேண்டியது இல்ல. காரணம், தமிழகத்தில் இனி அனைத்து விதமான பொதுப் போக்குவரத்துக்கும் ஒரே ஒரு செயலி தான். இது இந்தியாவிலேயே முதன்முறையாக நம்ம தமிழகத்தில் தான் அறிமுகமாகியுள்ளது.
முன்பு மெட்ரோ, எம்டிசி பேருந்துகளுக்காக சிங்கார சென்னை கார்டு வந்தது. தற்போது பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில், ஆட்டோ மற்றும் டாக்ஸி என அனைத்துப் போக்குவரத்துகளுக்கும் ‘சென்னை ஒன் ஆப்’ (Chennai One App) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களின் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில், ‘சென்னை ஒன் ஆப்’ (Chennai One App) என்ற புதிய செயலியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த ஆப் மூலம் நீங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நம்ம மொபைலிலேயே ‘QR கோடு’ மூலம் டிக்கெட் எடுத்து சுலபமாக பயணம் செய்யலாம். இனி ஒவ்வொரு போக்குவரத்துக்கும் தனித்தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த ஆப்பில் இந்த வசதி மட்டுமல்ல, மக்கள் பேருந்துகள், மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள் எந்த நேரத்தில் வரும் என்பதையும் ஒரே பயணப் பதிவின் மூலம் அறிந்து, அனைத்துப் போக்குவரத்தையும் எளிதாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த செயலி, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பொதுப் போக்குவரத்தை நம்பியிருக்கும் நடுத்தர மக்களுக்கு இது நேரத்தைச் சேமித்து, அன்றாட பணிகளில் உதவும் என்று நம்பப்படுகிறது.









