பொது

பிளாஸ்டிக்கால் ஹார்ட் அட்டாக் வருமா? மருத்துவர்கள் சொல்வதென்ன?

உணவு பொருட்களில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் நுண்துகள்களால் (Micro Plastics) மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் உணவகங்கள், ஜூஸ் கடைகள் மற்றும் இளநீர் கடைகளில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைப் பயன்படுத்த உணவு பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல், நம்முடைய உடல் நலத்திற்கும் பிளாஸ்டிக்கால் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பிளாஸ்டிக் மண்ணில் மக்குவதில்லை. மாறாக, சில ஆண்டுகளில் துகள்களாக சிதைவடைகிறது. அதேபோல சூடான உணவுகளை பிளாஸ்டிக் கவரில் கட்டும்போது, உணவில் மைக்ரோ பிளாஸ்டிக் கலக்கிறது.

உணவகங்கள், விழாக்கள் என பல இடங்களில், பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.இந்த சமயங்களிலும் நம் உடலில் மைக்ரோ பிளாஸ்டிக் கலக்க வாய்ப்பிருக்கிறது. பிளாஸ்டிக்கின் தீமைகளை உணர்ந்த தமிழ்நாடு அரசு,பிளாஸ்டிக் பைகள், கப், தட்டு போன்ற ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2019ம் ஆண்டிலிருந்து தடை விதித்துள்ளது.

உணவில் கலந்திருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்கால் மாரடைப்புக்கூட ஏற்பட வாய்ப்பிருப்பதாக இதய நோய் மருத்துவர் செந்தில்குமார் எச்சரிக்கின்றார். நீரழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, புகைபிடித்தல், மது அருந்துதல், உடற்பயிற்சியின்மை என பொதுவாக பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், நாம் உட்கொள்ளும் உணவில் கலந்திருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்கள், நாளடைவில் ரத்தக் குழாயில் படிந்து மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் செந்தில்குமார் கூறியுள்ளார்.

மைக்ரோ பிளாஸ்டிக்கால் மாரடைப்பு ஏற்படும் என்று திட்டவட்டமாக சொல்லமுடியாவிட்டாலும், முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்கிறார் மருத்துவர் செந்தில்குமார். உணவு விஷயத்தில் முடிந்தவரை ஸ்டயின்லெஸ் ஸ்டீல் மற்றும் கிளாஸ் பாத்திரங்களைப் பயன்படுத்த அறிவுறுத்துகின்றார்.

 

Related Posts