பொது

2,000 வருஷமா ஆண்களின் நிலை இதுதானா? திருக்குறள் சொல்லும் Possessiveness!

90ஸ் கிட்ஸ், 2k கிட்ஸ் என பாரபட்சம் பார்க்காமல் எல்லோரும் பொஸஸிவ்னஸ் என்ற உணர்ச்சியில் சிக்கித் தவிக்கின்றனர். குறிப்பாகப் பெண்களின் குதர்க்கமான காதல் கேள்விகளுக்கு, என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் பல ஆண்கள் முழிப்பதுண்டு. ஆனால், இதே நிலைதான் 2,000 ஆண்டுகளுக்கு முன்பும் இருந்ததென்று சொன்னால் நம்பமுடிகிறதா? 2,000 ஆண்டுகளுக்கு முன் இது குறித்து திருக்குறளில் “புலவி நுணுக்கம்” என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். “புலவி நுணுக்கம்” என்பது, ஊடலின் நுட்பமான நிலைகளைத் விளக்கும் ஒரு அதிகாரம்.

காதலில் இருக்கும் ஒரு சில பெண்கள், தங்களுடைய காதலன் வேறு எந்த பெண்ணையும் நினைக்கிறானோ என்ற சந்தேகத்தில் இருப்பார்கள். அப்படி எந்த பெண்ணும் இல்லை என்று தெரிந்தாலும் கூட, வீம்புக்காகவே சில பெண்கள் சண்டையிடுவார்கள். இது குறித்து ஒரு திருக்குறளில் வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
                                            குறள்- 1314

“எல்லோரையும் விட உன் மேல் நான் அதீத காதல் கொண்டுள்ளேன்” என்று தலைவன் கூற, “எல்லோரையும் விடவா? அப்படி என்ற எத்தனை பேரைக் காதலிக்கிறாய்? எவளைவிட? எவளைவிட?” என்று தலைவி சண்டையிடுகிறாள். அந்த சண்டை ஒரு செல்ல சண்டை என்பதுபோல வள்ளுவர் கூறுகிறார்.

காதலர்களுக்கிடையே ஒரு தும்மல்கூட அழகான செல்ல சண்டையை ஏற்படுத்தும் என்பதைக்கூட வெண்பாக்களாக திருவள்ளுவர் வடித்துள்ளார்.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.
                                              குறள்-1317

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.
                                              குறள்-1318

இந்த இரண்டு திருக்குறளும் தலைவனும் தலைவியும் ஒரு தும்மலை வைத்து எப்படி சண்டையிடுகிறார்கள் என்பதை காட்டியுள்ளது. ஒரு முறை தலைவனும் தலைவியும் பேசிக்கொண்டிருக்கும் போது தலைவனுக்குத் தும்மல் ஏற்பட்டது. அப்போது அவனை தலைவி வாழ்த்தினாள்(யாரேனும் தும்மினால் அவர்களை வாழ்த்தும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தது). ஆனால், வாழ்த்திய அடுத்த கனமே, “யார் உன்னை நினைத்தால் உனக்கு தும்மல் வந்தது?” என்று கேட்டு தலைவனிடம் தலைவி சண்டையிடுகிறாள். இது ஒரு திருக்குறளில் சொல்லப்படுகிறது. அடுத்த குறளில் வேறொரு சம்பவத்தை திருவள்ளுவர் சுட்டிக்காட்டுகிறார். தலைவனும் தலைவியும் பேசிக்கொண்டிருக்கும்போது, அதேபோல் தலைவனுக்கு தும்மல் வருகிறது. ஆனால் கடந்த முறை தும்மியபோது நடந்த சண்டையை நினைத்து, இம்முறை தும்மலை அடக்கிக்கொள்கிறான். “யாரோ உன்னை நினைக்கிறார்கள். அது எனக்கு தெரிந்துவிடக்கூடாதென நீ தும்மலை அடக்கிக்கொள்கிறாயா?” என்று தலைவனிடம் மீண்டும் தலைவலி சண்டையிடுகிறாள்.

ஏழேழு ஜென்மத்திற்கும் உன்னை பிரியமாட்டேன் என்று காதலர்கள் தங்களுக்குள் கூறிக்கொள்வதுண்டு. ஆனால் அதைவைத்து தலைவி ஒரு சண்டைபோடுவதை வள்ளுவர் அழகாகக் காட்டியுள்ளார்.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
                                       குறள் -1315

தலைவனும் தலைவியும் பேசிக்கொண்டிருந்தபோது, “இந்த பிறவியில் உன்னை பிரியமாட்டேன்” என்று தலைவன் வாக்கு கொடுக்கிறான். “அப்படி என்றால், அடுத்த பிறவியில் பிருந்துவிடுவாயா?” என்று கேட்டு தலைவி அழத்தொடங்கியதாக இந்த திருக்குறள் சொல்கிறது. இதுபோல பட ஊடல் கதைகளை இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து இன்றைய தலைமுறையினரும் தங்களுக்குப் பொருத்திப்பார்க்கும் அளவிற்குத் திருக்குறளை திருவள்ளுவர் நமக்கு விட்டுச்சென்றுள்ளார்.

Related Posts