பொது

டார்வினுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியை பேசிய சங்க இலக்கியம்…

 

உயிரினங்களின் தோற்றம் குறித்த ஆய்வுகளை உலகம் துவங்குவதற்கு முன்பே, “ஓரறிவு எது? ஆறறிவு எது?” என்று உணர்த்திய பெருமை சங்க இலக்கிய நூலான தொல்காப்பியத்தைச் சேரும். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்து 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் பல ஆய்வுகள் நடந்தன. லாமார்க், டார்வின், ரசல் உட்பட பல விஞ்ஞானிகள் அந்த காலகட்டத்தில் உயிரினங்களின் தோற்றம் குறித்தும், அவற்றின் பரிணாம வளர்ச்சி குறித்தும் ஆய்வுகள் நடத்தி ஆளுக்கொரு கோட்பாட்டை கொடுத்தனர். அவற்றில் சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு நம்மில் பலருக்கு தெரிந்தது. ஆனால் இவர்கள் எல்லாருக்கும் முன்பே, கிட்டதட்ட 2000 வருடங்களுக்கு முன்னால் உயிர்களின் பரிணாமம் குறித்து பேசியிருக்கிறது தொல்காப்பியம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்கலாம் என்று ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உயிரினத்திற்கு அறிவு என்பதே அடிப்படை என்றும், ஒரறிவு எதுவெனத் துவங்கி ஆறறிவு எதுவென்பதில் முடிகிறது இப்பாடல். வெறும் தொடுதல் உணர்வை மட்டும் கொண்டவை ஓரறிவு உயிரினங்கள்; தொடுதலும், சுவை உணர்வும் கொண்டவை இரண்டறிவு உயிரினங்கள்; தொடுதல், சுவையுணர்வு, மூக்கின் உதவியுடன் உணர்தல் என மூன்றும் செய்தால் அவை மூன்றறிவு உயிரினங்கள்; தொடுதல், சுவைத்தல், நுகர்தல் ஆகியவற்றுடன் கண்ணகளால் பார்த்தலும் சேர்ந்தால் அவை நான்கறிவு உயிரினங்கள்; தொடுதல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல் மற்றும் செவியால் கேட்கும் திறனும் இருந்தால் அவை ஐந்தறிவு உயிரினங்கள் என்று தொல்காப்பியம் சொல்கிறது. மற்ற ஐந்து அறிவுகளுடன் மனம் என்கிற ஆறாவது அறிவு சேர்ந்தால் அவை ஆறறிவு உயிரினம் என்றும், மற்ற உயிரினங்களைவிட மனிதன் எப்படி வேறுபடுகிறான் என்பதையும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே உணர்த்தியது இப்பாடலின் தனி சிறப்பு.

தொல்காப்பியம் கூறும் இந்த கருத்தையேதான் நவீன அறிவியலும் ஒத்துக்கொள்கிறது. ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிவை கொண்டிருக்கிறது என்பதை அறிவியல் ஏற்கிறது. எல்லா உயிரினங்களுக்கும் உள்ளுணர்வு என்பது அடிப்படை அறிவு. ஆனால், அதை எதன் மூலமாக அவை உணர்கின்றன என்பதே, அவை எத்தனை அறிவுகொண்ட உயிரினம் என்பதை தீர்மானிக்கின்றது என்பதை 2000 ஆண்டுக்கு முன்பே விளக்கி, தமிழர்களின் வாழ்வில் அறிவியல் எப்படி ஒன்றியிருந்தது என்பதை தொல்காப்பியம் விளக்குகிறது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts