நம்மில் பலர் பெரும்பாலான நேரம் கணினியில் வேலை செய்கிறோம். அதன் பிறகு செல்போனில் ஸ்க்ரோல் செய்துகொண்டே இருக்கிறோம்; கொஞ்ச நேரம் கூட கண்களுக்கு ஓய்வு என்பதே இல்லை. அதனால் கண்களில் அழுத்தம் ஏற்பட்டு பல சிக்கல்கள் ஏற்படுகிறது. இதற்கு 20-20-20 என்ற முறை எளிய தீர்வை கொடுக்கிறது.

கண் அழுத்தம் எப்படி ஏற்படுகிறது?
நீண்ட நேரம் கணினியை பார்த்துக்கொண்டே இருப்பதால் சிலர் கண் இமைக்கவே மறந்துவிடுவார்கள். ஒரு சிலர் கணினித் திரைக்கு மிக நெருக்கமாக அமர்ந்து வேலை செய்வார்கள். அதனால் திரையிலிருந்து வரும் நீல ஒளி கண்களை பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஒரு சிலர் கண்களில் லென்ஸ் பயன்படுத்துவதால், இமைக்கவே மறந்து கண்களில் வறட்சி ஏற்படும் அளவுக்கு கவனக்குறைவாக இருந்துவிடுகிறார்கள். கண்களில் அழுத்தம் ஏற்பட்டால் கண்களில் வலி, கண்கள் சிவந்து காணப்படுதல், மங்கலான பார்வை, தலைவலி, கழுத்து மற்றும் தோள்பட்டை வலி, கவனம் செலுத்துவதில் சிரமம் என பல சிக்கல் ஏற்படுகிறது.
20-20-20 விதி தரும் அற்புத தீர்வு..

கண் அழுத்தத்தை சமாளிக்க பல வழிமுறைகள் சொல்லப்பட்டாலும், 20-20-20 விதி எளிமையாக எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் எல்லாராலும் செய்யக்கூடிய வகையில் இருக்கிறது. நாம் வேலை செய்யும் போது தொடர்ச்சியாக கணினித் திரையை பார்த்துக்கொண்டே இருக்காமல், அவ்வப்போது இடைவேளை விட்டு கண்களுக்கு ஓய்வு தரவேண்டும் என்று 20-20-20 விதி அறிவுறுத்துகிறது. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 வினாடிகள் இடைவேளை எடுக்கவேண்டும்; அந்த 20 வினாடி இடைவேளையின் போது, நம்மிடமிருந்து குறைந்தது 20 அடி தொலைவில் உள்ள ஏதாவது ஒரு பொருளைப் பார்க்க வேண்டும் என்பது 20-20-20 விதி. இப்படிச் செய்வதன் மூலம் கண் தசைகள் இறுக்கம் அடையாமல், இலகுவாகி கண் அழுத்தத்தை குறைக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.









