வணிகம்

பொம்மை உற்பத்தி துறையை வளர்க்க தனி குழு – மத்திய அரசு!

உலகளாவிய சந்தையில் 2032-ஆம் ஆண்டிற்குள் 5 சதவீதப் பங்கை எட்டும் இலக்குடன், பொம்மைத் துறையை (Toy Sector) ஆதரிப்பதற்கான ஒரு பணிக்குழுவை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் துறை (DPIIT) புதுடெல்லியில் “Team Up for Toys: Driving SCALE, Innovation and Exports” (பொம்மைகளுக்கான கூட்டு முயற்சி: அளவு, புத்தாக்கம் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவித்தல்) கூட்டம் நடத்தியது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பியூஷ் கோயல் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

“இந்தியாவின் பொம்மைத் துறையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம், ‘விக்ஷித் பாரத்’ (வளர்ச்சி இந்தியா) நோக்கிய நாட்டின் பரந்த பயணத்தைப் பிரதிபலிக்கிறது” என கோயல் தெரிவித்தார். மேலும், இந்தியத் தயாரிப்பு பொம்மைகள் உலகெங்கிலும் உள்ள சந்தைகளை அதிகளவில் சென்றடைகின்றன என குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து, பியூஷ் கோயல் பொம்மைத் துறை வழிகாட்டி நூலை (Toy Sector Playbook) வெளியிட்டார்.

21,000-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs), DPIIT-ஆல் அங்கீகரிக்கப்பட்ட 770-க்கும் மேற்பட்ட பொம்மை ஸ்டார்ட்அப்கள், ஏறக்குறைய 50 பொம்மைத் தொகுப்புகள் மற்றும் 1,800-க்கும் மேற்பட்ட BIS உரிமதாரர்கள் இருப்பதாக இந்நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மேம்படுத்தப்பட்ட அளவு, புதுமை, வடிவமைப்புத் திறன்கள் மற்றும் ஏற்றுமதிப் போட்டித்திறன் ஆகியவற்றின் மூலம், 2032-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய பொம்மைச் சந்தையில் இந்தியாவின் பங்கை 5 சதவீதமாக உயர்த்துவதற்கான இலக்கு இந்நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

Related Posts