பொது

அச்சுறுத்தும் சிக்கன்குனியா… தெரிந்துகொள்ள வேண்டியவை!

கடந்த சில வாரங்களாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காய்ச்சல், உடல் வலி, மூட்டு வலி போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது சுகாதாரத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிக்குன்குனியா என்றால் என்ன?

சிக்குன்குனியா என்பது, கொசுக்கள் மூலகமாக பரவும் ஒருவகை வைரஸ் காய்ச்சல் நோய். “சிக்குன்குனியா” என்ற சொல்லுக்கு ஆப்பிரிக்காவின் மகோண்டே (Makonde) மொழியில் “வளைந்து போகச் செய்வது” என்று   அர்த்தம். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான மூட்டு வலி ஏற்பட்டு உடல் வளைந்து போகும் நிலை ஏற்படுவதால் இந்த பெயர் வந்தது. சிக்கன் குனியாவுக்கும் சிக்கனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சிக்குன்குனியா எப்படி பரவுகிறது?

சிக்குன்குனியா முதன்முதலில் 1952-ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவின் டான்சானியா நாட்டில் கண்டறியப்பட்டது.
இந்த நோய் ஏடிஸ் (Aedes) வகை கொசுக்களால் பரவுகிறது. இதே கொசுக்கள்தான் டெங்கு காய்ச்சலையும் பரப்புகின்றன.

இந்த ஏடிஸ் கொசுக்களின் கால்களில் கருப்பு – வெள்ளை நிற கோடுகள் காணப்படுவதால், இவை “Tiger Mosquito” என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ், உடலில் உள்ள தசை நார்கள், மூட்டு சவ்வுப் பகுதிகள், ஃபைப்ரோபிளாஸ்ட் செல்கள் போன்றவற்றை கடுமையாக பாதிக்கிறது. இதன் காரணமாக தீவிர அழற்சி ஏற்பட்டு, நீண்ட கால மூட்டு வலி உருவாகிறது.

ஒருவரிடமிருந்து ஒருவருக்கு நேரடியாகவோ, உணவு மூலமாகவோ சிக்கன்குனியா பரவாது.இது முற்றிலும் கொசுக்கள் மூலமாக மட்டுமே பரவும் தன்மையுடையது.

சிக்குன்குனியாவின் அறிகுறிகள் என்னென்ன?

ஒருவருக்கு சிக்கன்குனியா ஏற்பட்டால் அவருக்கு அதிக காய்ச்சல், கை, கால், முழங்கால், கணுக்கால்களில் கடுமையான வலி, மூட்டு வலி, தலைவலி, உடல் சோர்வு ஆகியவை ஏற்படும். சிலருக்கு தோல் சிரங்கு கூட ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு சிலருக்கு, காய்ச்சல் குணமானாலும் கை, கால்,மூட்டுவலி பல வாரங்கள் தொடரலாம்.

சிக்கன்குனியா உடலை பலவீனமாக்கும். ஆனால் உயிர்கொல்லி நோய் அல்ல. எனவே மக்கள் அச்சப்படாமல், சிக்கன்குனியாவுக்கான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவேண்டும்.வந்திருப்பது சிக்கன் குனியாதானா என்பதை சோதனைகள் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டு, முறையான சிகிச்சையை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இந்தியாவில் சிக்குன்குனியா பரவல்..

ஆசிய (Asian lineage), கிழக்கு–மத்திய–தென் ஆப்பிரிக்க (ECSA lineage), மேற்கு ஆப்பிரிக்க (West African lineage) என மூன்று மரபணு (genetic) வகைகளாக சிக்குன்குனியா வைரஸ் பிரிக்கப்படுகிறது.

ஆப்பிரிக்காவின் டான்சானியா நாட்டில் முதன்முதலில் 1952 ஆம் ஆண்டில் சிக்குன்குனியா வைரஸ் கண்டறியப்பட்டது. 1963 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இந்த வைரஸ் தொற்று ஒருவருக்கு இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு பரவ தொடங்கிய இந்த வைரஸ், 2005 ஆம் ஆண்டில் அதிக அளவில் பரவி மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. 2005க்குப் பிறகு இந்தியாவில் ஏற்பட்ட பெரும் பரவலுக்கு ECSA வகை வைரஸ் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

இடைப்பட்ட காலங்களில் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து இந்த வகை வைரஸை கட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக சிக்கன்குனியா அதிக அளவில் பலரை பாதித்துள்ளது.

அரசு எச்சரிக்கை…

சிக்குன்குனியா பரவலை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது சுகாதாரத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், “மருத்துவமனைகளில் டெங்கு அல்லது சிக்குன் குனியாவுக்கென பிரத்யேக வார்டுகளை அமைக்க வேண்டும். பாதிப்பை கண்டறியும் எலிசா பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தேவையான உபகரணங்களை போதிய அளவு இருப்பில் வைத்திருப்பது கட்டாயம். நடமாடும் மருத்துவ விரைவுக் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் அதனை ஆய்வு செய்வதும் முக்கியம். வீடுதோறும் கொசு உற்பத்தியை கண்காணிப்பதற்கான பணியில் போதிய நபர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். மாவட்ட பூச்சியியல் வல்லுனர்கள், சுகாதார ஆய்வாளர்கள் வீடுகள் தோறும் லார்வா புழு உற்பத்தி குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் பாதிப்பு பதிவான பகுதிகளில் தீவிர தூய்மை பணிகளை செய்ய வேண்டும். தேவையான அளவு பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தண்ணீர் தேங்கும் அனைத்து பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும். திடக்கழிவுகளை முறையாக அகற்றுவது கட்டாயம். வாரம் ஒரு முறை தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிக்குன் குனியா தொடர்பான விழிப்புணர்வை மக்களிடத்திலே ஏற்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிக்குன்குனியாவைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

சிக்குன்குனியாவைத் தவிர்க்க, வீடுகளுக்குள்ளும் வீடுகளைச் சுற்றியும் நீர் தேங்க விடாமல் கவனிப்பது மிக முக்கியம். வாரம் ஒருமுறை தண்ணீர் தொட்டிகள், குடங்கள், ஃபிரிட்ஜ் தட்டு, பூந்தொட்டிகள் போன்றவற்றை சுத்தம் செய்ய வேண்டும். ஏடிஸ் வகை கொசுக்கள் நன்னீரில் முட்டை இடுவதால், சிறிய அளவு நீர் தேங்கினாலும் அகற்ற வேண்டும். பகலில் கடிக்கும் கொசுக்கள் என்பதால் குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் முழுக்கை ஆடைகள் அணிவிக்கலாம், கொசு வலை பயன்படுத்தலாம், கொசு விரட்டி அல்லது கொசு மருந்துகளை பயன்படுத்தலாம். மேலும் DEET, IR3535 அல்லது ICARIDIN கொண்ட கொசு விரட்டி லோஷன் அல்லது ஆயின்மெண்ட்களை பயன்படுத்துவது பாதுகாப்பை அதிகரிக்கும்.

Related Posts