பொது

வெனிசுலாவின் எண்ணெய் வளம்தான் குறிக்கோள்.. டிரம்ப்பின் அதிரடி திட்டம்!

வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக அமெரிக்க எண்ணெய் நிறுவன தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தியுள்ளார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றது. இது தொடர்பான வழக்கு நடந்துவருகிறது. இதற்கிடையே, வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். சில அரசியல் நெருக்கடிகளால், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கையாளும் என்றும், எண்ணெயை விற்று அதிலிருந்து வரும் பணம் வெனிசுலா நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதை தொடர்ந்து பல அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவில் புதிய முதலீடுகளை செய்யவும், என்றும் ஏற்கனவே செய்திருக்கும் முதலீடுகளை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க, அமெரிக்க எண்ணெய் நிறுவன தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “வெனிசுலாவுடன் தற்போது நாம் மிகவும் இணக்கமாக இருக்கிறோம். அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவின் சிதைந்த எண்ணெய் தொழில்துறையை விரைவாக மீண்டும் கட்டியழுப்ப முடியும். அமெரிக்கா, வெனிசுலா மக்கள் மற்றும் முழு உலகிற்கும் பயனளிக்கும் வகையில், மில்லியன்கணக்கான பேரல் எண்ணெய் உற்பத்தியை கொண்டு வர உதவ முடியும்.

எந்த நிறுவனங்கள் வெனிசுலாவுக்கு செல்லும் என்பது குறித்த முடிவை நாங்கள் எடுப்போம். வெனிசுலா மிகவும் வெற்றிகரமானதாக இருக்கப் போகிறது. மேலும் அமெரிக்க மக்கள் பெரும் பயனாளிகளாக இருப்பார்கள். அமெரிக்கா உடனடியாக 5 கோடி பேரல்கள் வரை கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து விற்கத் தொடங்கும். இது காலவரையின்றித் தொடரும். இதற்கு வெனிசுலாவும் ஒப்புக் கொண்டுள்ளது.” என்றார்.

பின்னர் தனக்கு நோபல் பரிசு வழங்கப்படாதது குறித்து பேசிய அவர், “நான் 8 போர்களை முடிவுக்கு கொடுவந்திருக்கிறேன். இந்தியா-பாகிஸ்தான் போரை அணு ஆயுத மோதல்கள் இல்லாமல் முடிவுக்கு கொண்டு வந்தேன். 1 கோடி மக்களின் உயிர்களை காப்பாற்றியதற்காக பாகிஸ்தான் பிரதமர் என்னை பாராட்டினார். வரலாற்றில் என்னை விட வேறு யாருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியிருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை” என்றார்.

Related Posts