இந்தியாவின் கடன் பத்திரங்கள் ‘புளூம்பெர்க் குளோபல் அக்ரிகேட் இண்டெக்ஸ்’ குறியீட்டில் இணைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி இருக்கிறது.
இந்தக் குறியீட்டை வெளியிடும் புளூம்பெர்க் நிறுவனம்(bloomberg index), பெரிய அளவிலான வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களிடையே நடத்திய கருத்துக்கணிப்பில், இந்தியாவின் கடன் பத்திர சந்தை நடவடிக்கைகள் குறித்து பெரும்பாலானோர் பாஸ்டிவான ஆதரவுக் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், இந்திய அரசு வெளியிடும் கடன் பத்திரங்கள் விரைவில் புளூம்பெர்க் குளோபல் அக்ரிகேட் இண்டெக்ஸ் குறியீட்டில் ஒரு பகுதியாக இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
இந்த புளூம்பெர்க் குளோபல் அக்ரிகேட் இண்டெக்ஸ் குறியீடு என்பது உலகெங்கிலும் உள்ள நாடுகளின் கடன் பத்திரங்களை வகைப்படுத்தி, அவற்றின் மதிப்பைக் கணக்கிடுவதற்காக புளூம்பெர்க் நிறுவனத்தால் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய தரவரிசைக் குறியீடு ஆகும்.

இந்தக் குறியீடு உலக அளவில் ரூ. 265 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகளைப் பிரதிபலிக்கிறது. இதில் இந்தியா இணைவதால், இந்தியப் பத்திரங்களின் நம்பகத்தன்மை அதிகரிக்கும். இந்தியாவுடன் அண்டை நாடுகளின் பத்திரங்களை ஒப்பிடும்போது, இந்தியப் பத்திரங்கள் அதிக லாபம் தரக்கூடியவையாக இருக்கும், இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பத்திரங்களில் அதிக அளவில் முதலீடு செய்ய இது வழிவகுக்கும்.









