வெனிசுலாவின் ஜனநாயக இயக்கத்தின் முக்கியப் புள்ளியாகத் திகழ்பவர் மரியா கொரினா மச்சாடோ. அண்மைக் காலங்களில், லத்தீன் அமெரிக்காவில் மக்களின் தைரியத்துக்கான சக்திவாய்ந்த சின்னமாக இவர் உருவெடுத்துள்ளார். வெனிசுலா மக்கள் இவரைப் பாசமாக ‘வெனிசுலாவின் இரும்புப் பெண்மணி’ என்றும் அழைக்கின்றனர்.
அமைதிக்கான நோபல் பரிசு…
வெனிசுலாவில் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்தியதற்காகவும், சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகள் போராடி, நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை உருவாக்க முயன்றதற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோபல் பரிசை அறிவித்த நார்வே நோபல் கமிட்டியின் தலைவர், ஜோர்ஜென் வாட்னே ஃப்ரைட்னெஸ், மச்சாடோவைப் பாராட்டினார். “ஒரு காலத்தில் ஆழமாகப் பிளவுபட்டுக் கிடந்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த, முக்கியத் தலைவராக இவர் செயல்படுகிறார். இவர் இருள் சூழ்ந்திருக்கும் சூழலிலும் ஜனநாயகத்தின் சுடரை அணையாமல் காக்கும் துணிச்சல் மிக்க, அர்ப்பணிப்புள்ள அமைதிப் போராளி” என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

இந்த நோபல் பரிசு அறிவிப்பு வருவதற்கு முன்னர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு வழங்கப்படலாம் என சில நாடுகள் பரிந்துரைத்தனர். ஆனால் இந்த நோபல் பரிசை மரியா கொரினா தட்டி சென்றுள்ளார். பரிசை வென்ற இவர் தனது X தளத்தில் “இது வெனிசுலா மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி” மேலும், “தனது நோக்கத்துக்கு ஆதரவு அளித்த அதிபர் ட்ரம்புக்கும் இந்த நோபல் பரிசை அர்பணிக்கிறேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.









