சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் பாதுகாப்பு விவகாரங்களில் பரஸ்பரம் உதவிக்கொள்ளும் வகையில் ராணுவ ஒப்பந்தம் போட்டுக்கொண்டுள்ளன. Strategic Mutual Defense Agreement என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தின் படி, இந்த இரண்டு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் நேரும்பட்சத்தில் மற்றொரு நாடு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் என்ன சொல்கிறது?
சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்தார். அப்போது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ராணுவ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்படி, எந்த ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது மற்றொரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு ஒப்பானது. உதாரணமாக, பாகிஸ்தான் மீது எதாவது ஒரு நாடு தாக்குதல் நடத்தினால், அது சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தியதற்கு சமமானது. இந்த சூழலில் சவுதி, எதாவது ஒரு நாட்டிற்கு எதிரான நிலைப்பாடு எடுத்து பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி செய்யவேண்டிய நிர்ப்பந்தம் இந்த ஒப்பந்தத்தின் காரணமாக ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில், மற்ற அரபு நாடுகளும் இந்த ராணுவ ஒப்பந்தத்தில் தங்களை இணைத்துக்கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால், இது மிக சக்திவாய்ந்த ஒப்பந்தமாக மாற வாய்ப்பிருக்கிறது.
ஏன் இந்த ஒப்பந்தம் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது?
இந்த மாதம் 9 ஆம் தேதி, கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலானது, கத்தாரின் முக்கிய உயர் அதிகாரிகள் வசிக்கும் பகுதியை குறிவைத்து நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், அமைதி பேச்சுவார்த்தையை விரும்பிய ஹமாஸ் அமைப்பை சேர்ந்த சிலர் மாற்றும் கத்தாரின் அதிகாரிகள் சிலர் பலியானார்கள். இஸ்ரேல்- ஹமாஸ் இடையான போரில், சமாதான பேச்சுவார்த்தை நடத்திய முக்கிய நாடாக கத்தார் இருந்த வந்த நிலையில், கத்தார் மீதே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது, மற்ற அரபு நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. கத்தாருக்கு நேர்ந்த நிலை தங்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மற்ற அரபு நாடுகள் கருதுகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தானுடன் சவுதி மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் இஸ்ரேலுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், துருக்கி உள்பட வேறு எந்த இஸ்லாமிய நாடுகளிடமும் அணுஆயுதம் இல்லாத நிலையில், அணுஆயுதம் கொண்ட பாகிஸ்தானுடன் சவுதி ஒப்பந்தம் போட்டுள்ளது. இதனால், சவுதியின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் தனது அணுஆயுதத்தை பயன்படுத்தும் என்ற கருத்துகளும் எழுந்துள்ளது. இது குறித்த எந்த தகவலும் ஒப்பந்தத்தில் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், சவுதிக்கு பாகிஸ்தானின் துணை பலமாக அமைந்துள்ளது.
பாக்கிஸ்தானின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, இந்தியாவின் ராணுவத்தை சமாளிக்க சவுதி உறுதுணையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. “ஆப்ரேஷன் சிந்தூர்” இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று இந்தியா கூறியிருக்கும் நிலையில், சவுதியுடனான இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு வலு சேர்க்கிறது. ஆனால், கத்தார் இந்தியாவுக்கு எதிராக திரும்ப வாய்ப்பில்லை என்றும், அப்படி செய்தால் சவுதிக்குத்தான் இழப்பு என புவிசார் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவை எதிர்த்தால் சவுதிக்கு என்ன சிக்கல்?
சவுதி அரேபியாவும் இந்தியாவும் நீண்டகாலமாக நடப்புறவில் இருந்து வருகின்றன. இந்தியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளில் சவுதி நான்காவது இடத்தில் இருக்கிறது. இருநாடுகளுக்கும் இடையே 41.88 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடந்து வருகிறது. ஆனால், பாகிஸ்தானுடன் 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில்தான் வர்த்தகம் நடத்துகிறது. பாகிஸ்தானை விட 10 மடங்கு அதிக மதிப்பிலான வர்த்தகத்தை சவுதி இழக்க விரும்பாது என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

சவுதி அரேபியா – பாகிஸ்தான் ஒப்பந்தம் குறித்து பேசிய, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், ” இரு நாடுகள் இடையே நீண்டகாலமாக பரிசீலனையில் இருந்த ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளதை மத்திய அரசு அறியும். இந்த ஒப்பந்தத்தில் உள்ள விஷயங்களையும், அதன் தாக்கங்களையும் மத்திய அரசு ஆய்வு செய்யும். நாட்டின் தேசிய நலனை பாதுகாப்பதிலும், நாட்டின் விரிவான பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.









