புதிய வரிவிதிப்புகளில் இருக்கும் குளறுபடிகள் காரணமாக, இந்தியவிலிருந்து தபால் துறை மூலமாக அமெரிக்காவிற்கு பார்சல் அனுப்ப தற்காலிகமான தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, அந்நாட்டு வரி அமைப்பில் பல மாற்றங்களை செய்துவருகிறார். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய இந்திய உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் 100 அமெரிக்க டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள இந்திய பொருட்களுக்கு வருகிற 29ஆம் தேதியிலிருந்து அமெரிக்காவில் சுங்க வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, 800 டாலர் மதிப்பில்லான பொருட்கள் வரை சுங்க வரி இல்லாமல் இருந்தது. அந்த முறை இப்போது நீக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 29ஆம் தேதியிலிருந்து, இந்தியாவிலிருந்து அமெரிக்கா அனுப்பப்படும் அனைத்து தபால் பொருட்களுக்கும் அதன் மதிப்புக்கு ஏற்றபடி கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், சுமார் 100 டாலர் வரையில் மதிப்புள்ள பொருட்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் சுங்கத்துறையால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெளிவான விவரங்கள் இல்லாததால் நாடு முழுவதும் இன்று முதல் பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இந்திய தபால் துறையின் உத்தரவின் பேரில்,நாடு முழுவதும் தபால் நிலையங்களில் அமெரிக்காவுக்கு பார்சல் புக்கிங் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களும், இங்கு வசிக்கும் அவர்களின் உறவினர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சரசரியாக ஒரு நாளில் 3 டன் அளவிலான சரக்குகள் அமெரிக்கவிற்கு இந்திய தபால் துறையின் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. அது இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவை தொடர்பு கொண்டுள்ளதாகவும், இந்த சிக்கல் கூடிய விரைவில் தீர்க்கப்படும் என்றும் இந்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.









