திரையுலகம் எவ்வளவோ வண்ணங்களை காட்டியுள்ளது; வலிகளையும் கடத்தியுள்ளது. ஒளி, ஒலி (ஓசையும் காட்சியும்) இவை இரண்டையும் மையமாக வைத்துதான் திரையுலகம் இன்றுவரை இயங்கி வருகிறது. அப்படி இருக்கையில் திரையில் வாசத்தை எப்படி காண்பிப்பது என்ற கேள்விக்கு ஒரு இயக்குநர் பதிலளித்துள்ளார்.
மனிதன் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய 5 புலன்களின் வாயிலாக உணர்ச்சியை பெருகின்றான். இவற்றில் கண், காது மட்டுமே நாம் ஒரு வீடியோவை பார்க்கும்போதோ அல்லது சினிமாவை பார்க்கும்போதோ பயன்படுகிறது. சுவையை உணரவைக்கும் நாக்கு, தொடுதலையும், தட்ப வெப்பத்தையும் உணர்த்தும் தோல், வாசத்தை உணரும் மூக்கு ஆகியவை அப்போது பயன்படுவதில்லை. ஆனால் ஒரு வாசத்தை சினிமாவில் காட்ட இயலும் என்கிறார் ஒரு இயக்குநர்.

இயக்குநர் ராமின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள பறந்து போ திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த திரைப்பட வெளியீட்டை ஒட்டி இயக்குநர் ராம் கொடுத்த ஒரு பேட்டியில் தொகுப்பாளர் ஒரு கேள்வியை எழுப்பினார். கற்றது தமிழ் திரைப்படத்தில் உனக்காகத்தனே இந்த உயிருள்ளது எனும் பாடலின் “மழை வாசம் வருகின்ற நேரம் எல்லாம் உன் வியர்வை தரும் வாசம் வருமல்லாவா” எனும் வரியை சுட்டிக்காட்டிய அவர், இதனை நா.முத்துகுமார் எழுதிவிட்டார். எப்படி நீங்கள் படமாக்கினீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த இயக்குநர் ராம், “அதற்காகத்தான் அந்த காட்சியில் பவுடர் பயன்படுத்தி இருப்போம். மண் வாசத்தை எப்படி நாம் காட்ட முடியும். அதற்கு மழை பெய்ய வேண்டும். ஆனால், பவுடர் என்பது எளிமையானது. பவுடருக்கு ஒரு வாசம் இருக்கு இல்லையா? அதற்கு அடுத்த காட்சியில் ஜீவா அதை முகர்ந்தும் பார்ப்பார். இதன் வழியாக எளிமையாக ஒரு வாசத்தை அவர் முகர்ந்து பார்க்கிறார் என்பது தெரிய வரும். முத்துகுமார் அதனை கவிதையாக எழுதியிருப்பார்; நாங்கள் அதனை பொருண்மையாக அதை எடுத்து இருப்போம். முதலில் எதன் மூலமாக ஒரு வாசத்தை புரிந்து கொள்ள முடியும். ஏதோ ஒரு பொருளின் மூலமாகத்தான் புரிந்துகொள்ள முடியும். தெரிந்த பொருட்களின் மூலமாக பேசுவதுதான் காட்சிமொழி” என விளக்கியுள்ளார்.

ராம் விளக்கும் இந்த பாடலின் காட்சியானது நடிகர் ஜீவா, நடிகை அஞ்சலி பயன்படுத்தும் சாண்டல் பவுடரை எடுத்து தான் வைத்திருக்கும் பைக்குள் கொட்டிக்கொள்வார். பின்னர் அவர் தனிமையில் இருக்குபோது அந்த பையினை எடுத்து முகர்ந்து கொள்வார். அது அவருக்கு அஞ்சலியின் நினைவை தருவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
-ச.பிரபாகரன்









