உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு 2024ல் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்திருப்பதாக ‘ஐக்கிய நாடுகள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அறிக்கை – 2025’ (UNVAC Report) தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு மட்டும் 41,370 குழந்தைகளுக்கு எதிராக நடந்த கடுமையான வன்முறைகள் ஆவணம் செய்யப்பட்டிருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. இது 2023ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதை விட 25 சதவீதம் அதிகம் என்றும், இதில் 22,595 குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பள்ளிகளிலும், குழந்தைகளுக்கு உதவும் மையங்களிலும் நடந்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
போர், உள்நாட்டு கிளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் 2024ம் ஆண்டில் பல நாடுகளில் 4,500 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 7,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்ததாகவும் அறிக்கை கூறியுள்ளது.
“படிக்கவும், கற்றுக்கொள்ளவும், விளையாடவும் வேண்டிய குழந்தைகள் இப்போது தோட்டாக்கள் மற்றும் குண்டுகளின் கீழ் எவ்வாறு உயிர்வாழ்வது என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். இது நம்மை தூங்கவிடாத நிலைமை” என்று இந்த அறிக்கையை தயாரித்ததில் ஒருவரான ஐநாவின் சிறப்பு பிரதிநிதி விர்ஜினியா கம்பா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிகபட்சமாக பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் பகுதிகளில் போர் காரணமாக உலகிலேயே அதிகபட்சமாக, 8,554 குழந்தைகள் கடுமையான வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிணைக்கைதிகளாக இருக்கும் குழந்தைகளின் குழந்தை பருவம் முற்றிலும் பறிக்கப்பட்டுள்ளது என்றும், இதை அனுமதிக்கும் நான் குழந்தைகளை பாதுகாக்க தவறிவிட்டோம் என்றும் விர்ஜினியா வருத்தம் தெரிவித்துள்ளார்.
சோமாலியா, மியான்மர், சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகமாக இருப்பதாக அறிக்கை கூறியுள்ளது. இந்த அறிக்கை ஒரு எச்சரிக்கை மணி என்றும், குழந்தைகளுக்கு எதிரான இந்த வன்முறைகளை நிறுத்தாவிட்டால் உலகில் அமைதி என்பதே இல்லாமல் போய்விடும் என்றும் விர்ஜினியா எச்சரித்துள்ளார். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள கணக்குகள் துல்லியமானவை இல்லை என்றும், இது ஐநாவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும், இதைவிட பலமடங்கு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருவதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.









