பொது

பெரு நாட்டில் 1000 ஆண்டுகள் பழமையான மம்மி…

பெரு நாட்டில் 1000 ஆண்டுகள் பழமையான மம்மி கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெரு தலைநகர் லிமாவில், வாயு குழாய் (gas pipeline) பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டபோது, இந்த 1000 ஆண்டு பழமையான மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மம்மியானது, பெரு நாட்டின் மத்திய கரையோர பகுதியில் கி.பி. 1000 முதல் கி.பி. 1470 வரையிலான காலத்தில் பரவலாக இருந்த ஒரு சாங்காய் நாகரிகத்தைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பெண் மம்மி, கை கால்கள் கட்டப்பட்டு அமர்ந்த நிலையில் இருக்கின்றது. நன்கு பதப்படுத்தப்பட்ட இந்த பெண் மம்மி, அடர் பழுப்பு நிற முடியுடன் காணப்படுகிறது.

சாங்காய் நாகரிகத்தில் இறந்தவர்களை உட்கார்ந்த நிலையில் மூட்டைக்கட்டி புதைக்கும் வழக்கம் இருந்தது என்றும், உடலுடன் பானைகள், உணவு பொருட்கள் சேர்த்து புதைக்கப்படும் வழக்கம் இருந்திருக்கிறது. அதேபோல் இந்த மம்மியுடன் பல பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பெரு தலைநகர் லிமாவில் 400க்கும் மேற்பட்ட தொல்லியல் தளங்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை 1000 ஆண்டுகள் தொன்மை கொண்ட இடங்களாக இருக்கின்றன. நிறைய இடங்களில் சில சடங்குகளுக்காகப் பலியிடப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் மம்மிக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த வகை மம்மிக்கள் கடற்கரையோரம் முந்தைய காலங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இப்போது லிமாவில் கிடைக்கப்பெற்ற மம்மி, அதுபோல பலியான பெண் இல்லை என்று தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், ஒரு நகரின் மையப்பகுதியில் இதுபோல 1000 ஆண்டு பழமையான மம்மி, வெறும் 20 மீட்டர் ஆழத்தில் கிடைத்திருப்பது, தங்கள் துறையில் ஒரு மைல் கல் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற கண்டுபிடிப்புகள், உலக அளவில் தங்கள் நாட்டின் பெருமையையும் தொன்மையையும் பறைசாற்ற ஆதாரமாக இருக்கும் என்று நெகிழ்ச்சியாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts