பொது

‘கிங்’ கோலியின் பிராண்ட் வேல்யூ குறையுமா?

விராட் கோலி தனது டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், பிராண்டுகள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவின் மிக முக்கியமான பிராண்ட் அம்பாசிடராக விளங்கிய கோலி, இன்றும் ₹1,900 கோடி மதிப்புள்ள பிராண்டு மதிப்புடன் பரபரப்பாக இருக்கிறார். ஆனால், இனி கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் பங்கேற்காமல் போவதால், அவர் பிராண்ட் அம்பாசிடராக தொடர்ந்து இருக்கமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுத் தொடர்பாக மூலோபாய சந்தைத் தலைவர் தினேஷ் அரோரா தெரிவித்ததாவது, “Field visibility இல்லாமல் ஒரு பிராண்டு எவ்வாறு வளர்ச்சியடைய முடியும்?” விராட் கோலியின் பிராண்டு ஆதிக்கம் மறுக்க முடியாத ஒன்று. ஒரே ஒப்பந்தத்தில் ரூ.100 கோடியைத் தாண்டிய ஒரே இந்திய விளையாட்டு வீரர் இவர் தான். பூமாவுடன் ரூ. 110 கோடி, MRF உடன் ரூ.100 கோடி என 40க்கும் மேற்பட்ட பிராண்டுகளுக்குப் முகமாக இருக்கிறார். அவற்றில் PUMA, Audi, Myntra, PepsiCo, Nestle போன்ற முன்னணி நிறுவனங்கள் அடங்கும்.

கோலியின் வாழ்க்கையில் 2014 மிகவும் சவாலான காலகட்டமாக இருந்தது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர் கவலையூட்டும் ஆட்டத்தைக் காட்டினார். அதன் விளைவாக, பல பிராண்டுகள் அவருடன் இருந்த ஒப்பந்தங்களை ரத்து செய்தன. ஆனால் 2016 ஐபிஎல் சீசனில் 973 ரன்கள் அடித்து, “Comeback King Kohli” என அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதன்பின் அவருக்கு ஆதரவாக நின்ற பிராண்டுகள் சிறப்பாக வளர்ந்தன.

இன்ஸ்டாகிராமில் ‘கிங்’:

சர்வதேச கிரிக்கெட்டில் கோலியின் பங்கு குறைந்தாலும், அவர் தற்போதும் IPL மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறார். இன்ஸ்டாகிராமில் 270 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களுடன், உலகளாவிய டாப் 20 பிரபலங்களில் ஒருவராக உள்ளார். இதனுடன், Health, Fitness மற்றும் Fashion துறைகளில் Chisel Gym மற்றும் WROGN போன்ற பிராண்டுகளின் முக்கிய முகமாகவும் இருக்கிறார். எனவே இந்த துறைகளில் அவர் தொடர்வது அவசியமாகிறது.

பிராண்ட் வெற்றிக்கு ஒரு பாடம்:

2024 TAM AdEx மற்றும் க்ரோல் மதிப்பீட்டின்படி, கோலியின் பிராண்டு மதிப்பு பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான் மற்றும் ரன்வீர் சிங் அகியோரை கூட மிஞ்சி உள்ளது. அவர் இந்தியா மட்டுமின்றி உலக இளைஞர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பதே இதற்குக் காரணம்.பிராண்டு வெற்றிக்கு ‘field visibility’ மட்டும் போதாது; ஒரு நிலையான, நம்பிக்கைக்குரிய கதையும் தேவை. கோலி தனது தோல்விகளை வெற்றிகளாக மாற்றிய நிகழ்வுகள், அவரைப் பற்றிய நம்பிக்கையை பிராண்டுகளுக்கு வழங்குகின்றன.

அடுத்து என்ன?

கோலியின் சர்வதேச போட்டிகளில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவரது கவனம் தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் IPL-இல் திரும்பும். அதிக நேரம் மைதானத்தில் இல்லையென்றாலும் அவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாகதான் இருக்கிறார். இதனால் அவரது பிராண்ட் வேல்யூ தொடர்ந்து உயரும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. விளையாட்டு வீரனாக மட்டுமல்லாமல், ஒரு பிராண்டாகவும் மாறியுள்ளார் கோலி.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts