சமீப நாட்களாக பங்குசந்தையில் மட்டுமல்லாமல், அனைவராலும் பேசப்பட்ட ஒரு விஷயம் – வெள்ளி விலை இன்னும் எவ்வளவு உயரப் போகிறது? என்பது தான். ஆனால் நேற்று, ஒரு மணி நேரத்திலேயே முதலீட்டாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது வெள்ளி விலை.
நேற்றைய வர்த்தக துவக்கத்தில், கிலோ ரூ.2.54 லட்சம் என்ற புதிய உச்சத்தை தொட்டது வெள்ளி. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருவதால், இதன் விலை மேலும் உயரும் என பலரும் எதிர்பார்க்க, அடுத்த ஒரு மணி நேரத்திலேயே கிலோவுக்கு ரூ.21,000 வரை சரிந்தது.
சர்வதேச சந்தையில், 1 அவுன்ஸ் வெள்ளி 80 டாலரை தொட்ட பிறகு, மீண்டும் 75 டாலராக குறைந்தது. இதனால் தான் இந்திய கமாடிட்டி சந்தையிலும் வெள்ளி விலை சரிய தொடங்கியது. இந்த ஆண்டில் மட்டும் வெள்ளி விலை 181% வரை உயர்ந்துள்ளது. இந்த லாபத்தை முதலீட்டாளர்கள் எடுக்கத் தொடங்கியதே இந்த சரிவுக்கான முக்கிய காரணம்.
இதை தவிர, உக்ரைன்–ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க தரப்பில் எடுக்கப்படும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. பொதுவாக உலக அரசியலில் போர், வரி உயர்வு போன்ற பதற்றமான சூழ்ல் ஏற்பட்டால், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பாதுகாப்பான முதலீடுகளின் விலை உயரும். காரணம், அந்த நேரங்களில் மக்கள் பாதுகாப்பான முதலீடுகளைத் தேர்வு செய்வார்கள்.
உலக அரசியல் சூழலில் பதற்றம் குறையும்போது, தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பாதுகாப்பான முதலீடுகளின் தேவை குறைவது வழக்கமான ஒன்றுதான். உக்ரைன்–ரஷ்யா போரின்போதும், இந்தியா–பாகிஸ்தான் போரின்போதும் தங்கத்தின் விலை உயர்ந்தது இதற்கு சிறந்த உதாரணமாகும்.
வெள்ளி விலை அதன் உண்மையான மதிப்பை விட மிக வேகமாக உயர்ந்ததால், இந்த சரிவு தவிர்க்க முடியாதது. பெரிய ஏற்றத்திற்குப் பிறகு ஒரு சிறிய சரிவு வருவது இயல்பான ஒன்றாகும். முதலீடு செய்யும் போது அவசரத்தை விட பொறுமையே முக்கியம் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே நேரம், வெள்ளி விலை சரிவு விரைவில் சரியாகி, மீண்டும் அடுத்த உச்சத்தைத் தொடும் என சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.








