பழைய மற்றும் பயனற்ற Scrap பொருட்களை விற்றதால், இந்திய அரசு ரூ.3,200 கோடிக்கு மேல் வருவாய் பெற்றதோடு, மத்திய அலுவலகங்களில் பெரும் பகுதி இடங்கள் காலியாகியுள்ளன.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இந்தியா அளவிலான பல்வேறு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தூய்மையை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக Swachhata (Cleanliness) பிரச்சாரம் 5.0 என்ற திட்டத்தின் மூலம் மத்திய அரசு அலுவலகங்களில் இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் கழிவுகள், பதிவேடுகள் மற்றும் இதனை வைக்கும் இடங்கள் உள்ளிட்டவற்றை வருடந்தோறும் Scrap ஏலத்தில் விற்பனை செய்து வருகிறது.
அந்த வகையில், இந்த வருடம் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இருந்து எடுக்கப்பட்ட பழைய மற்றும் பயனற்ற Scrap பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் இந்திய அரசு ரூ.3,296 கோடிக்கு மேல் வருவாய் பெற்றுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், Scrap-பை விற்றதன் மூலம் அரசுக்கு ரூ.3,296.71 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதனால் மத்திய அலுவலகங்களில் 696.27 லட்சம் சதுர அடிகள் இடத்தை Scrap பொருட்கள் பிடித்திருந்த நிலையில், அவை அகற்றப்பட்டுள்ளன. மேலும் 137 லட்சத்திற்கும் மேற்பட்ட பழைய அலுவலக Scrap-கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை “அதிர்ச்சியூட்டும் ஆனால் உண்மை” என அவர் குறிப்பிட்டார்.
2021, 2022, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து வெற்றிகரமாக இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் ரூ.2,364 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டுகளை விட இந்த முறை 1,000 கோடிக்கு மேல் அதிக வருவாய் கிடைத்துள்ளது.








